பாரதிபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையம்

கிளிநொச்சி பாரதிபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையம் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சியின் தென்மேற்கு பிரதேசத்தில் நகரிலிருந்து 06 கிலோமீற்றருக்கு அப்பால் இக் கல்வி நிலையம் அமைந்துள்ளது. தரம் 01 தொடக்கம் தரம் 11 வரை இங்கு வகுப்புக்கள் நடைபெறுகின்றன. தற்போது 120 க்கு மேற்பட்ட மாணவர்கள் மாலை நேரக் கல்வியை கற்றுவருகின்றார்கள்.

மலையாளபுரம், பாரதிபுரம், கிருஸ்ணபுரம், பொன்னகர் கிராமங்களில் நகருக்கு சென்று தங்களின் மாலை நேரக் கல்வி தொடர முடியாத மாணவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதே இக் கல்வி நிலையம். இப் பிரதேசங்களில் உள்ள குடும்பங்களின் பெரும்பாலானவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்கள். நாளாந்த கூலித் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றவர்கள். எனவே இவர்களால் தங்களின் பிள்ளைகளை நகருக்கு அனுப்பி மாலை நேர மேலதிக கல்வி வழங்க முடியாது.

தங்களின் பிள்ளைகளுக்கு சிறப்பான கல்வி வழங்க வேண்டும் என்று இப்பிரதேச பெற்றோர்களிடம் மனம் இருந்தாலும் அவர்களின் வறுமை அதற்கு ஒரு தடையாக இருக்கிறது. எனவேதான் கல்விக்கு வறுமை ஒரு தடையாக இருக்க கூடாது என்ற கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் பிரதான நோக்கத்திற்கு அமைவாக

கனடா தமிழ் மருத்துவ நலச் சங்கத்தின்( canda Tamil Medical Association)  CTMA இன் அனுசரணையில் பாரதிபுரம் பிரதேசத்தில் இக் கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டது. பாரதிபுரம் மகா வித்தியாலயம்,அன்னைசாரதா வித்தியாலயம், இராமகிருஸ்ணா வித்தியாலயம் போன்ற பாடசாலைகள் சுற்றயலில் காணப்படுகின்றன.

அத்தோடு கிராமங்களை நோக்கிய கணிணி கல்வி என்ற நோக்கில் பாரதிபுரம் விஞ்ஞானக் கல்வி நிலையத்திலும் அனைத்துலக மருத்துவ சுகாதார நலச் சங்கத்தின் அனுசரணையில்(International Medical Health Organization) IMHO கணிணி கற்கை நிலையத்தையும் ஆரம்பித்து மாணவர்களுக்கு இலவச கணிணி கல்வியை வழங்கி வருகின்றது.

மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மற்றும் சமூத்தின் பங்களிப்புடன் சிறந்த கல்வியை மாத்திரமன்றி ஒழுக்கத்தையும் இக்கல்வி நிலையம் போதித்து வருகிறது.

Copy link
Powered by Social Snap